Wednesday, 2024-04-24, 4:03 AM
My site
Welcome Guest | RSS
Main | நான் கடவுள் | Registration | Login
Site menu

Section categories

உலக அதிசங்கள்

நான் கடவுள்


இயக்குனர் பாலாவின் படங்களில் மட்டுமல்ல.. தமிழின் சிறந்த படங்கள் பட்டியலிலும் நிச்சயமாக ‘நான் கடவுள்’ திரைப்படத்துக்கு ஒரு நிரந்தர இடம் உண்டு.
இப்படத்தின் தொழில்நுட்ப நேர்த்தியும், உள்ளடக்கத் தரமும் தமிழ் சினிமாவை நிச்சயமாக அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும். சீரியஸான நாவல் தரும் எல்லா உணர்வுகளையும் இப்படம் தருகிறது. ஒரு முழுமையான பின்நவீனத்துவப் படம். பிரதிக்குள்ளிருந்தே பிரதியை பகடி செய்யும் படைப்பிது.

இந்திய சினிமா இதுவரை கண்டிராத கதைக்களம். யாசகம் கேட்கும் விளிம்புநிலை மாந்தர்களைப் பற்றிய காட்சிகள் அதிகமென்றாலும் அவர்கள் மீது பரிதாபம் மட்டுமே படம் பார்க்கும் ரசிகனுக்கு ஏற்படுவதை பலவந்தமாக தடுத்திருக்கிறார் பாலா. அவர்களைப் பார்த்து சிரிக்கிறோம், அழுகிறோம், கோபப்படுகிறோம், நெகிழ்கிறோம், இத்யாதி.. இத்யாதி.. ஹேட்ஸ் ஆஃப் பாலா.

Viduppu.comஇதுதான் படத்தின் கதை என்று ஆரம்பக்காட்சிகளிலேயே தெளிவுபடுத்திவிடும் இயக்குனர் பிற்பாடு கதையை மறந்து காட்சிகளை மையப்படுத்தியே படத்தை நகர்த்திச் செல்கிறார். இசையமைப்பாளர், வசனகர்த்தா, ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் என்று அவரவர் தரப்பும் முழுவீச்சில் வித்தையைக் காட்ட இயக்குனர் எடுக்க நினைத்ததை விட நேர்த்தி சுலபமாக கைகூடுகிறது. இவ்வளவு மூர்க்கமான படத்துக்கு க்ளைமேக்ஸ் சப்பை என்பதால் படம் முடிந்தவுடன் கைத்தட்ட மனமின்றி வெறுமை சூழ்கிறது.

Viduppu.comநாயகன், நாயகி இருவரை சுற்றிதான் கதை என்ற தமிழ் சினிமா மரபை பாலா கொஞ்சம் கூட மதிக்கவேயில்லை. ஒவ்வொரு பாத்திரமும் ரிலே ரேஸ் மாதிரி ஓடி படத்தின் சுமையை பகிர்ந்துகொள்கிறார்கள். இப்படத்தில் ஆர்யாவுக்கு கிடைத்த ஓபனிங் சீன் மாதிரி எந்த ஹீரோவுக்காவது இதுவரை கிடைத்திருக்குமா என்பது சந்தேகம். அழகான அஹோரி. இவரிவர் தான் சிறப்பாக நடித்தார் என்று சுட்டிக்காட்ட இயலாத அளவுக்கு படத்தில் பங்கேற்ற நண்டு, சிண்டுக்கள் வரை எல்லோருமே பர்ஃபெக்ட் ஃபெர்பாமன்ஸ்.

இளையராஜாவின் இசை படத்தின் பல காட்சிகளை நடத்திச் செல்கிறது. வசனங்கள் இல்லாத இடத்திலும் யாரோ பேசிக்கொண்டிருப்பது போன்றே, கதை சொல்லிக் கொண்டிருப்பது போன்றே ஒரு பிரமை. கோல்டன் க்ளோப், ஆஸ்கர் விருதுகள் தரும் கம்முனாட்டிகள் குழுவுக்கு இப்படி ஒரு மேதை இங்கே இருப்பதாவது தெரியுமா என்பதே சந்தேகம். மேஸ்ட்ரோவுக்கு இணை மேஸ்ட்ரோ மட்டுமே.

Viduppu.comஜெயமோகனின் பகடி பலாப்பழம் மாதிரி இனிக்கிறது. வசன சூறாவளியாய், சுனாமியாய் எட்டுத்திக்கும் சுழன்றடித்து வியாபித்திருக்கிறார். மதம், கடவுள், சினிமா, அரசு, காவல்துறை என்று தமிழ்ச்சூழலில் பலமாக அஸ்திவாரம் போட்டு நிறுவப்பட்டிருக்கும் அதிகாரமைய கேந்திரங்களை இரக்கமேயில்லாமல் கேலிக்குள்ளாக்குகிறது அவரது கூர்மையான பேனா. ‘ஜெயமோகனா இப்படியெல்லாம் எழுதியிருக்கிறார்?’ என்று அதிர்ச்சி மதிப்பீடுகளையும் மீறி கைத்தட்டலை அள்ளிச் செல்கிறது வசனங்கள். ‘தொப்பி, திலகம்’ மேட்டரில் ஜெமோ அண்ணாச்சியை கண்டித்த சினிமாக்காரர்களை அதே சினிமா மூலமாகவே மறுபடியும் வம்புக்கு இழுத்திருக்கிறார்.

“கவலைப்படாதீங்க எல்லாத்தையும் ஆண்டவன் பார்த்துப்பான்” என்றொருவர் சொல்ல மற்றொருவர், “தேவடியா மகன். புளுத்துவான்” என்கிறார். ஆர்.எஸ்.எஸ். அனுதாபிகள் இனியும் ஜெமோவை நம்பலாமா? அண்ணாச்சி நைசாக இறுதிக்காட்சிகளில் தன்னுடைய இந்துத்துவா விசுவாசத்தைக் காட்டவும் தவறவில்லை. இக்கட்டான நேரத்தில் நாயகியை இந்து சாமியார் காப்பாற்ற, அதன் பின்னர் மாதாவை வேண்டி அவளுக்கு எந்த பிரயோசனமும் இல்லையாம். படத்தோடு ஒட்டாமல் க்ளைமேக்ஸ் வரும் நேரத்தில் தேவாலயமும், கன்னியாஸ்திரியும், நாயகியின் ஜெபமும் காட்டப்பட்டது வேண்டுமென்றே ஒட்டவைத்தது போல் தெரிகிறது. இந்த நுண்ணரசியலைக் கண்டு மனம் வெறுத்து தீக்குளிக்க முடிவு செய்திருக்கும் தோழர் அதிஷாவுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்.

Viduppu.comக்ளைமேக்ஸ் இதுதான் என்பதை படம் ஆரம்பிக்கும்போது இயக்குனர் முடிவு செய்திருக்கவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. இடைவேளைக்குப் பிறகு குருட்டாம் போக்கில் அதுபாட்டுக்கு செல்லும் படம் க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க பதட்டத்தோடு எடிட் செய்யப்பட்டிருக்கிறது. முதல் பாதியின் க்ரிப் இரண்டாம் பாதியில் சுத்தமாக இல்லை.

ஒரு நார்மலான மனிதரால் இதுபோன்ற கதையை சிந்தித்து படமெடுப்பது என்பது சாத்தியமேயில்லாத ஒன்று. மிகக்கொடூரமான காட்சிகள் படம் நெடுகிலும் கொடூரத் தோரணமாய் கட்டி தொங்க விடப்பட்டிருக்கிறது. இளகிய மனம் படைத்தவர்களும், பெண்களும், குழந்தைகளும் கட்டாயம் தவிர்க்க வேண்டிய படமிது. ஹேராம் படத்தில் ஒரு குருட்டுப்பெண் குடிசையில் நடந்துவரும் காட்சி நினைவிருக்கிறதா? மனதை உலுக்கும் அந்த ஒரு காட்சி தரும் தாக்கத்தையே இப்படத்தில் எல்லாக் காட்சிகளும் தருகிறது. ஒருமுறை படம் பார்த்தவர்களே இரண்டாவது முறை பார்ப்பது சந்தேகம்.

சென்னையின் சத்யம், ஐனாக்ஸுகளில் யுவகிருஷ்ணாக்களும், கேபிள்சங்கர்களும் பார்த்து பாராட்டி, எழுந்து நின்று கைத்தட்டக்கூடும். உசிலம்பட்டி கண்ணனில் படம் பார்க்கும் முனுசாமிகளும், மாடசாமிகளும் இப்படத்தை ஏற்றுக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வசூல்ரீதியான மிகப்பெரிய வெற்றியை இப்படம் தவறவிடக்கூடும் என்றாலும் பல்வேறு விருதுகள் பட்டியலில் இப்போதே துண்டுபோட்டு இடத்தை பிடித்து வைத்திருக்கிறது. லாபம் பற்றி சிந்திக்காமல் கலைச்சேவையாக இப்படத்தை தைரியமாக தயாரித்த தயாரிப்பாளர் பாராட்டப்பட வேண்டியவர்.

கொண்டாட்ட சூழலுக்கான படம் இது இல்லை என்றாலும் இயக்குனர் பாலா பல்லக்கில் வைத்து தமிழர்களால் கொண்டாடப்பட வேண்டியவர். ஹேராமுக்குப் பிறகு இசையும், இயக்கமும் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியிருக்கிறது.

இக்கட்டான சூழலில் தமிழ் சினிமாவை ரட்சிக்க வந்திருக்கிறார் கடவுள்!
Tag Board

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

Copyright MyCorp © 2024 Site managed by uCoz