பட்டாளம்
பள்ளி மாணவர்களின் துள்ளித் திரிந்த காலம். ட்ராஜடியைச் சேர்த்து இறுதியில் உச் கொட்ட வைத்தாலும் பிட்டு பிட்டாக வரும் கதை சில இடங்களில் கொட்டாவியை வரவழைக்கிறது.
ஒரு பள்ளியில் இரு கோஷ்டிகள். இவர்களின் கோஷ்டி மோதலை பிராக்டிகலாக எடுத்துக் கொள்ளும் பள்ளி ஆசிரியர் நதியா. பாட்டும், பைட்டுமாக செல்லும் படத்தில் சின்னதாக ஒரு காதல். புதிதாக வந்து சேரும் கிருபாவை காதலிக்கிறான் அருண். ஏதிர் கோஷ்டியிலுள்ள இர்பான், கிருபாவை தனது இறந்துபோன தங்கையாக நினைத்து பழகுகிறான். இதனை தவறாக புரிந்து கொள்கிறான் அருண்.மாணவர்களின் கோஷ்டி மோதல் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டில் தோல்வியையும் நதியாவுக்கு அவமானத்தையும் ஏற்படுத்துகிறது. அவருக்கு ஏற்படும் அவமானத்தைப் பார்த்து கோஷ்டி சண்டையை கைவிட்டு மாணவர்கள் ஒற்றுமையாகிறார்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுகிறார்கள். அனைவரும் இணையும் நேரத்தில் எதிர்பாராமல் நடக்கும் விபரீதம் எல்லா சந்தோஷத்துக்கும் கொள்ளி வைக்கிறது.
நதியா பள்ளி தாளாளரா? மனோதத்துவ டாக்டரா? மனநல விடுதி நடத்துகிறவரா? அவரது பேக்ரவுண்ட் என்ன? விடையில்லாத கேள்விகள் அவரது வேடத்துக்கே வில்லங்கமாகி விடுகிறது. வகுப்பறையை சித்திரவதைக் கூடமாக்கும் ஆசிரியரிடம் அமைதியாக டிஸ்மிஸ் ஆர்டரை வாங்கிச் செல்லும்படி கூறும்போது நடிப்பில் ஒட்டிக் கொள்கிறது மிடுக்கு. மற்றபடி..? நடிக்க வைப்பதற்குப் பதில் நடக்கவிட்டிருக்கிறார்கள்.
மாணவர்களில் பாலாஜி தேறிவிடுகிறார். வரிக்குவரி அள்ளிவிடும் காமெடியும், நகைச்சுவைக்கேற்ற உடல் மொழியும்... ஹேட்ஸ்ஆப் பாலாஜி. அந்த மணியை வித்திடலாம்னு அப்பவே சொன்னேனே மேடம் என்று சாகிற நேரத்திலும் சலம்புவது பிளாக் க்யூமர். கிருபாவுக்கு குழந்தை முகம். அவரது குழந்தைத்தனமான நடிப்பு பாப்பா படிப்பது ப்ளஸ்டூவா இல்லை பிரைமரியா என கேட்க வைக்கிறது.
சீராக செதுக்காத திரைக்கதை படத்தின் பலவீனம். இர்ஃபானின் அம்மா அவனைவிட்டு செல்வதெல்லாம் தேவையில்லாத திணிப்பு. அதேபோல் அருணின் அப்பா ஒரு கொலைகாரார் என்பதும். கொலைகாரனின் மகன் கொலைகாரன் என்று காட்டியிருப்பதும் நெருடல். மனநல விடுதியில் மூன்று டீன்ஏஜ் மாணவர்கள் தங்கிப் படிப்பது சினிமாவில் மட்டுமே சாத்தியம்.
மாணவர்களின் எக்ஸ்ட்ரா எனர்ஜிதான் படத்தை நகர்த்திச் செல்கிறது. ட்யூனில் கொஞ்சம் ஒயினையும் சேர்த்து ஊற்றியிருக்கிறார் ஜாஸி கிஃப்ட். பாடல்கள் ஒவ்வொன்றும் (வார்த்தை புரியாவிட்டாலும்) ஜாலி கிஃப்ட். சம்பிரதாயமான பின்னணி இசை. தொய்வான காட்சிகளை தூக்கி நிறுத்த முயல்கின்றன ஒளிப்பதிவும், எடிட்டிங்கும்.
ஊருபட்ட காய்கறியிருந்தும் ஊறுகாயை தொட்டுத் திண்கிற நிலையிருந்தால் எப்படியிருக்கும்? பட்டாளத்தையும் அந்தப் பட்டியலில் சேர்க்கலாம்.