Friday, 2024-04-19, 6:23 AM
My site
Welcome Guest | RSS
Main | கொள்ளையன் | Registration | Login
Site menu

Section categories

உலக அதிசங்கள்

கொள்ளையன்!
 
"மலைநாடு' என்றொரு நாடு இருந்தது. இந்த நாட்டை ஒட்டி அடர்த்தியான காடு ஒன்று இருந்தது. மலைநாட்டு மக்கள் எந்த விஷயத்திற்குச் சென்றாலும் இந்தக் காட்டின் வழியே உள்ள காட்டுப் பாதை வழியாக சென்று வர வேண்டும்.வியாபார விஷயமாகவோ, சொந்தக்காரர்களைச் சந்திக்கவோ மேல் படிப்பிற்காகவோ, மக்கள் எதற்குச் சென்றாலும் இந்தக் காட்டுப் பாதையைத் தான் பயன்படுத்துவர்.

சமீபகாலமாக அந்தக் காட்டில் ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரன் ஒளிந்திருந்து, காட்டுப் பாதையில் போவோர், வருவோரையெல்லாம் கத்தி முனையில் மடக்கி, அவர்களிடமிருந்து பணம், பொருள், உணவுப் பண்டங்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்து வந்தான்.

பெரும் பெரும் வியாபாரிகள் லட்சக்கணக்கான பணத்தை அவனிடம் பறிக்கொடுத்து விட்டுத் தவித்திருக்கின்றனர். நாளாக நாளாக மலை நாட்டு மக்கள் அந்த காட்டுப் பாதையில் செல்வதற்கே பயந்தனர். இதனால் மலை நாட்டை விட்டு பொருட்கள் வெளியே போகாமலும், மற்ற நாட்டிலிருந்து பொருட்கள் மலை நாட்டிற்குள் வராமலும் மக்களின் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்தது.இந்த வழிப்பறிக் கொள்ளைக்காரனின் அட்டகாசங்கள் மலை நாட்டு மன்னனின் காதுகளுக்கும் எட்டாமல் இல்லை. அவனும் அந்தக் கொள்ளையனைப் பிடிக்க எத்தனையோ வழிகளில் முயற்சி செய்தான். ஆனால், அரசனிடம் கொள்ளையன் சிக்கவே இல்லை.

மக்கள் மன்னனிடம் முறையிட்டு இருந்தனர். கொள்ளையனை சீக்கிரம் பிடிக்காவிட்டால், மலைநாட்டு பொருளாதாரம் மிகவும் சீர்குலைந்த நிலைக்குப் போய்விடும் என்று படித்த அறிஞர்கள் பலர் மன்னனிடம் எடுத்துரைத்தனர்.மன்னன் செய்வதறியாது கைகளைப் பிசைத்தான்.

ஒருநாள்—

காட்டுப் பாதையில் வழிப்பறிக் கொள்ளைக்காரன் இருப்பதை அறியாத ஒரு அறிஞர், வேற்று நாட்டிலிருந்து மலை நாட்டிற்குச் செல்ல அந்தக் காட்டுப் பாதை வழியே வந்து கொண்டிருந்தார்.

அவரோ சற்று வயதானவர். அழுக்கான உடைகள் அணிந்திருந்தார். தோளில் ஒரு துணிப் பொட்டலம் மட்டும் இருந்தது. திடீரென்று அவர் முன்னே அந்த வழிப்பறிக் கொள்ளைக்காரன் தோன்றினான். முகத்தைக் கறுப்புத் துணியால் மூடி, கையில் பளபளக்கும் கத்தி ஒன்று வைத்திருந்தான். ""ஏய் பெரியவரே! உம்மிடம் இருக்கும் அத்தனை பொருட்களையும் கொடுத்துவிட்டு ஓடிவிடு. இல்லையேல் உம்மை இந்த இடத்திலேயே குத்திக் கொன்று விடுவேன்!'' என்று மிரட்டினான் கொள்ளைக்காரன்.

அந்த அறிஞர் சாந்தமான பார்வையால் அவனைப் பார்த்தார். ""மகனே! அவசரப்படாதே! என்னிடம் இருக்கும் பொருட்களை உனக்கே கொடுத்து விடுகிறேன். அதற்கு முன்னால் எனக்கொரு சந்தேகம் வருகிறது. அதை மட்டும் தெளிவுபடுத்தி விட்டு இந்தப் பொருட்களை எடுத்துக் கொண்டு செல்!'' என்றார் அறிஞர்.

""என்ன சந்தேகம் உமக்கு?'' என்று கேட்டான் கொள்ளைக்காரன். ""நீ எதற்காக கொள்ளையடிக்கிறாய்?'' என்று கேட்டார் அறிஞர். ""என் குடும்பத்தைக் காப்பாற்ற!'' என்றான் கொள்ளைக்காரன். ""நீ இப்படி கொள்ளையடித்துச் சம்பாதிப்பதை உன் குடும்பத்தார் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்களா?'' என்று கேட்டார் அறிஞர்.""ஆமாம்!'' என்றான் கொள்ளைக்காரன்.

""சரி! நீ இப்படிச் சம்பாதிப்பதை மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் அவர்கள், நீ ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு கஷ்டத்தில் சிக்கிக் கொண்டாலோ அல்லது தண்டனை எதிலாவது அகப்பட்டுக் கொண்டாலோ, அதிலும் உன் குடும்பத்தார் பங்கு கொள்வர் இல்லையா?'' என்று கேட்டார் அறிஞர்.அதற்குப் பதில் தெரியாது விழித்தான் கொள்ளைக்காரன்.""இதுதான் எனக்கு ஏற்பட்ட சந்தேகம். உனக்கும் பதில் தெரியவில்லை. ஆகவே, இதற்கான பதிலை உன் குடும்பத்தாரிடமே சென்று நேரில் கேட்டுத் தெரிந்து கொண்டு வந்து என்னிடம் சொல். அதுவரை கடவுள் சத்தியமாக நான் இங்கேயே இருக்கிறேன்,'' என்றார் அறிஞர்.

அறிஞரின் கேள்வி கொள்ளைக்காரனை என்னவோ செய்துவிட்டது. அவன் உடனே தன் குடும்பத்தார் இருக்கும் இடத்திற்கு ஓடினான்.""என்ன இன்றைக்கு எதுவுமே கொண்டு வரவில்லையா?'' என்று கேட்டாள் அவள் மனைவி.""கொண்டு வந்திருக்கிறேன். ஒரே ஒரு கேள்வியை இதோ பார்... நான் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல். நான் கொள்ளையடித்துக் கொண்டு வரும் பொருட்களை எல்லாம் நீங்கள் சுகமாக அனுபவிக்கிறீர்கள். ஒரு சந்தர்ப்பத்தில் நான் அரசாங்கத்திடம் பிடிபட்டு தண்டனைக்காக நிற்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தண்டனையில் உங்களுக்கும் பங்கு உண்டுதானே?'' என்று கேட்டான் கொள்ளையன்.

""அதெப்படி? எங்களை வாழ வைக்கத்தான் நீங்கள் கொள்ளையடிக்கிறீர்கள். நாங்கள் அனுபவிப்பதற்கு மட்டுமே பிறந்தவர்கள். நீங்கள் எங்களுக்காக உழைத்துக் கொட்டுவதற்கென்றே பிறந்தவர். உழைக்கின்ற சமயத்தில் உங்களுக்கு எந்தக் கஷ்டம் நேர்ந்தாலும் அதில் எங்களால் பங்கு கொள்ள முடியாது!'' என்று சொன்னாள் மனைவி.அந்தப் பதிலைக் கேட்டு திடுக்கிட்ட கொள்ளைக்காரன், தன் கையில் இருந்த கத்தியைத் தூக்கி தூர எறிந்தான். முகத்தை மறைத்திருந்த கறுப்புத் துணியையும் கழற்றி வீசி எறிந்தான். பிறகு மறுபடி காட்டிற்குள் ஓடி அந்த அறிஞரின் கால்களில் விழுந்தான்.

""ஐயா! பெரியவரே! தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள். நான் திருந்திவிட்டேன். நீங்கள் யாராக இருந்தாலும் சரி, உங்களிடமே நான் பணி புரிகிறேன். என்னை ஏற்று என்னை அழைத்துச் செல்லுங்கள்!'' என்று மன்றாடினான். மனந்திருந்திய அந்த கொள்ளைக்காரன். அறிஞரும் அவனை தன்னுடன் அழைத்துச் சென்றார்.காட்டில் வசித்த கொள்ளைக்காரன், தற்சமயம் காட்டில் இல்லை என்கிற விஷயம் மலைநாட்டு மன்னனுக்கும், மக்களுக்கும் எட்டியது. ""எப்படியோ ஒழிந்தான்!'' என்று சந்தோஷப்பட்டனர். எப்படிப்பட்ட கொள்ளையனையும் அன்பால் திருத்த முடியும் என்பது புரிகிறதா குட்டீஸ்!
Tag Board

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

Copyright MyCorp © 2024 Site managed by uCoz